புதிதாகக் கற்பது ஏன் மகிழ்ச்சியைத் தருகிறது?ஆன்மிக நரம்பியல் விளக்கம்

நாம் புதிதாக ஏதாவது ஒன்றைக் கற்கும் போது, மூளையில் “Dopamine” எனப்படும் ரசாயனம் மெதுவாக உயர்கிறது.இது ஒரு இனிய மகிழ்ச்சியையும் ஆழ்ந்த ஆர்வத்தையும் நம்முள் எழுப்புகிறது.

அந்த ரசாயன அலைதான், “இன்னும் கொஞ்சம் கற்றுக்கொள்ளலாமே!” என்ற உந்துதலை நமக்குள் உயிர்ப்பித்து,அதே போன்ற பல விடயங்களை மீண்டும் மீண்டும் கற்கத் தூண்டும் ஒரு இயற்கையான ஊக்கத்தை நமக்கு அளிக்கிறது.

சிலர் போதை ஏறியது போல் ஆழ்ந்த கல்வித் தேடல்களிலும், ஆராய்ச்சிகளிலும், அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் முழுமையாக மூழ்குவதற்கு, இந்த ரசாயன செயல்பாடே காரணம்.அது அவர்களைத் தொடர்ச்சியாக அறிவைப் பின்தொடர வைத்துக் கொண்டே இருக்கிறது.

இந்தப் புனிதமான ஊக்க உணர்வுதான், (intrinsic motivation) புதிய விடயங்களைத் தேடவும், சிக்கலான பிரச்சினைகளைத் தீர்க்கவும் தூண்டும் மூளையின் இயற்கை அமைப்பாகும்.

அருமை நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள்:

இரண்டு நபர்கள் பசி தீர மாட்டார்கள்.
01-அறிவில் முழுமையாக ஈடுபடுபவர்
02-உலக ஆசையில் விழுந்து கிடப்பவர் (சுனன் அத்தாரமீ:343)

அறிவில் தன்னை முழுமையாக ஆழ்த்திக் கொண்டவர், ஒவ்வொரு நிமிடத்திலும் ஒரு நிசப்தமான மகிழ்ச்சியை அனுபவிப்பவராக இருக்கிறார். கல்வி தொடர்பான மிகச் சிறிய துணுக்குகள் கூட, அவரின் மனத்தில் ஆழமான ஆனந்தத்தை எழுப்புகின்றன.

இந்த மகிழ்ச்சியை எந்த உலகப் பொருளும், பணமும், புகழும் வழங்க முடியாது. அது மனத்தின் ஆழத்திலிருந்து மலரும் அற்புதமான உள்ளார்ந்த மகிழ்ச்சி (intrinsic joy) ஆகும்.

இது ஒரு addiction-அடிமைத்தனம் போல் செயல்படும்.ஆனால் அது தீமையை ஏற்படுத்தும் அடிமைத்தனம் அல்ல.மாறாக, அறிவு தரும் மகிழ்ச்சியில் மூளை மீண்டும் மீண்டும் ஈர்க்கப்படுவதால் உருவாகும் ஒரு நேர்மையான மனஉந்துதலாகும்.

இதனால்,கல்வியில் பேரார்வம் உள்ள ஓர் ஏழை, செல்வம் மிகைத்த ஓர் அரசனை விட மகிழ்ச்சியாக வாழ முடியும்.

சிற்றின்பம் vs பேரின்பம்

பணம் சம்பாதிப்பது, ஒரு வகைப் பசியாக இருந்தாலும்,அது ஒரு போதும் நிம்மதியைத் தருவதில்லை.அதில் மன நிறைவு கிடைப்பதில்லை.

ஆனால்,கல்விப் பசி என்பது,மன நிம்மதி,ஆனந்தம்,பிடித்த வேலையைச் செய்யும் உள்ளுணர்வை அளிக்கிறது.

புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தீவிர ஆசையும், ஆர்வமும் நிலையான, உள் மகிழ்ச்சியின் மூலதனமாக இருக்கிறது.

உடலுறவின் போது கூட மூளையில் “Dopamine” ரசாயனம் சுரக்கிறது.அது நிறைவான மகிழ்ச்சியைத் தந்தாலும்,அதன் பின் எற்படும் சுய விமர்சன நிலை (post-orgasmic clarity) காரணமாக,அது நிலையான, தொடர்ச்சியான மகிழ்ச்சியாக மாறுவதில்லை.

ஆனால்,ஒரு புதிய கல்வியை அறிந்த பிறகு அல்லது ஒரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய பிறகு, “Dopamine” ஊடாகக் கிடைக்கும் மகிழ்ச்சி நிலையானது.

இதனால்தான்,உடலுறவை சிற்றின்பமாகவும் (சிறிய இன்பம்) கல்வியில் ஈடுபடுவதை பேரின்பமாகவும் வரையறுக்க முடிகிறது.

உடலுறவில் கிடைக்கும் மன நிம்மதியை விட கல்வியில் கிடைக்கும் மன நிம்மதி ஆழமானது;அபூர்வமானது.

சிக்கலான ஒரு புதிருக்கு விடை காணும்போது அல்லது ஒரு அறிவாற்றல் சவாலைத் தீர்க்கும்போது ஏற்படும் இந்தப் புதிய அறிவின் இன்பமே, ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற அறிவியல் அறிஞர்களைத் தொடர்ந்து கடினமான சிந்தனைகளில் ஈடுபட வைத்தது.

ஒவ்வொரு புதிய அறிவும் நம்முடைய உள் மன மகிழ்ச்சிக்கும், ஆழமான அறிவுப் பயணத்துக்கும் வழிகாட்டுகிறது.

முதன்மையான அல்குர்ஆன் வசனம்

முதன் முதலாக இறக்கப்பட்ட அல்குர்ஆன் வசனத்தின் முதல் வார்த்தை, “இக்ரஃ-ஓதுவீராக!” என்றுதான் ஆரம்பித்துள்ளது. (96:01)

இது பூமியில் அல்குர்ஆன் ஓதப்படும் காலமெல்லாம், புதிதாகக் கற்றுக்கொண்டே இருப்பதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது.

மனிதன் புதிய நூற்களை,செய்திகளை,
தகவல்களை வாசிக்கும் ஒவ்வொரு தருணமும், மனித மூளை தன்னையே மறுசீரமைத்து மேம்படுத்திக்கொள்ளும் அற்புதச் செயலில் ஈடுபடுகிறது.

அது புதிதான நரம்புத் தளங்களை உருவாக்கவும் ஏற்கனவே இருக்கும் இணைப்புகளை வலுப்படுத்தவும் செய்கிறது. (London Taxi Drivers Study)

இந்த மாற்றத்திறனுக்கு ஏற்ப மூளை தன்னை வடிவமைத்துக்கொள்ளும் திறமையை
“Neuroplasticity” என்று அழைக்கிறார்கள்

இந்தச் செயல்பாடு, ஒட்டுமொத்த உடல் மற்றும் மன வளர்ச்சி மேம்பட நேரடியாக உதவுகிறது. இது மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முக்கிய பங்காற்றுகிறது.

வயோதிப நிலையை அடைபவர்கள் அதிகம் புத்தகங்கள் வாசிப்பதன் மூலம் Alzheimer-நினைவிழப்பு நோயை கட்டுப்படுத்த முடியும்.

மூளையில் உருவாகும் “Amyloid Beta” (அமிலாய்டு பீட்டா) புரதக் கட்டிகள்தான் “Alzheimer” நோய்க்கு ஒரு முக்கியக் காரணமாகக் கருதப்படுகின்றன.

தீவிரமாக வாசிப்பது போன்ற அறிவாற்றல் செயல்பாடுகளில் ஈடுபடுவது, இக்கட்டிகள் மூளையில் உருவாகுவதைத் தாமதப்படுத்தலாம் அல்லது அவற்றின் தாக்கத்தைக் குறைக்கலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. (Landau, S. M., et al. 2012)

Scroll to Top